Sunday, November 27, 2016

மிளகு பலன்கள்

16-ம் நூற்றாண்டு வரை, உணவில் காரம் சேர்க்க மிளகுதான் பயன்பட்டது. அயல்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு மிளகாய் அறிமுகப்படுத்தப்படும் வரை, மிளகைத்தான் பயன்படுத்தினோம். ’பத்து மிளகு இருந்தால், பகைவர் வீட்டிலும் உண்ணலாம்’ என்று ஒரு பழமொழி உண்டு. நாம் அறியாமல், நம் உடலில் நச்சு செலுத்தப்பட்டால்கூட, அதை முறியடிக்கும் சக்தி இதற்கு உண்டு. நச்சுப்பொருளை அறியாமல் தீண்டினாலோ முகர்ந்தாலோ ஏற்படும் பல்வேறு உடனடி அலர்ஜி தொந்தரவுகளை, மிளகு உடனடியாக முறியடிக்க உதவும்.

அலர்ஜியால் ஏற்படும் மூக்கடைப்பு, தும்மல், சில நேரங்களில் ஏற்படும் தோல் அரிப்பு, திடீர் தோல் படைகள், கண் எரிச்சல், மூக்கு நுனியில் ஏற்படும் அரிப்பு, மூச்சிரைப்பு போன்ற அலர்ஜி நோய்களை விரட்டும் ஆற்றல் கொண்டது மிளகு. 
பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளி ஏற்பட்டால், அதை வெளியேற்ற இருமல் உண்டாகும். அதுபோன்ற நேரங்களில், கடைகளில் இருமல் மருந்தை வாங்கிக் கொடுப்பது தவறு. 

பெரும்பாலான இருமல் மருந்துகள், இருமலை உடனடியாக நிறுத்தி, சளியை உள்ளுக்குள்ளேயே உறையவைத்து, நோயைக் குணப்படுத்த முடியாமல் செய்துவிடும். இதற்கு மிளகு மிகச் சிறந்த மருந்து. மிளகு, சளியை இளக்கி வெளியேற்றி, இருமலைக் குறைக்க உதவும். நான்கு மிளகைப் பொடித்து, ஒரு டீஸ்பூன் தேனில் குழைத்து, இளஞ்சூடாக்கி, கால் டம்ளர் தண்ணீரில் கலந்து இரவில் கொடுத்தால், சளி வெளியேறி இருமலை நிறுத்தும். சில நேரங்களில் வாந்தியில்கூட சளி வெளியேறும். அதற்காகப் பயந்துவிடக் கூடாது. அதே நேரம், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கக் கூடாது. 
தோலில் ஏற்படும் திடீர் தடிப்புக்கு, மிளகுக் கஷாயம் நல்ல மருந்து. 


  • தலையில் ஏற்படும் புழுவெட்டுக்குச் சின்ன வெங்காயம், மிளகு இரண்டையும் அரைத்து, வெளிப்பூச்சாகப் பூசினால், பிரச்னை சரியாகும். 


  • பனிக்காலத்தில் நெஞ்சுச் சளி கட்டாமல் இருக்க, எல்லா வயதினரும் தினமும் உணவில் மிளகைக் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆஸ்துமா நோயாளிகள், மிளகை தினமும் ஏதாவது ஒருவகையில் உணவில் சேர்த்து வந்தால், இளைப்பின் தீவிரம் குறையும். 

No comments: